priyapriya எழுதியவை | டிசம்பர் 13, 2007

www.புதுகாய்கறி.com

“என்னங்க, நான் அஷ்வினை டாக்டர் கிட்டே கூட்டிட்டுப் போறேன். வீட்டுல காய்கறி ஒண்ணுமே கிடையாது. சட்டுன்னு ரெண்டு காய் மட்டும் வாங்கிட்டு வந்துடறீங்களா?”  
   
என் பையனுக்கு ஜுரம் போய் எனக்குத்தான் ஜன்னி வரபோகிறது என்பது தெரியாமல் என்னவரைக் கடைக்கு அனுப்பி வைத்தேன்.

டாக்டர் விசிட் முடிந்து, மருந்து வாங்கி, குழந்தையைக் குஷிப் படுத்த ஒரு புது டாயையும் வாங்கிக்கொண்டு வீட்டைத் திறந்தால், குப்பென்று ஏதோ வாடை!  
   
“அஷ்வின், இங்கயே வெளியே நில்லு. அம்மா போய் காஸைச் சரிபார்த்துட்டு வரேன்” என்று அவசரமாய் ஜன்னல்களைத் திறந்தபடி கிச்சனுக்குள் நுழைந்தால், ”சூடா ஆர்டிசோக் சூப் சாப்பிடறியா, வித்யா?” என்று இவர் கப்போடு வரவேற்றார்.  
   
இங்கே ஒன்று சொல்லவேண்டும். நாங்கள் வசிப்பது பாஸ்டனில். இவர் மேற்படிப்பு படிக்க வந்தது, வேலையில் அமர்ந்தது, என்னைக் கைப்பிடித்தது, அஷ்வின் பிறந்தது என்று இவரின் அமெரிக்க வாசம் தொடங்கி பேஷாக 13 வருடம் ஆகிவிட்டது.  
   
அதனாலேயோ என்னவோ நம்ம ஊர்படி இங்கிலீஷ் காய்கறிகளான காலிஃப்ளவர், காரட், பீட்ரூட் முதலியன இவர் பாஷையில் ஆர்டினரி, ரெகுலர், போரிங்! அமெரிக்காவில் சகஜமாகப் புரளுவதும் நம்மூரில் காணக் கிடைக்காததுமான காய்கறிகள் இவருக்கு டெலிஷியஸ், ஸ்பெஷல், டிஃபரண்ட்.! 
   
இந்தியன் ஸ்டோரில் “ஆசை ஆசையாய் இருக்கிறதே வாழைப்பூ வாங்கிடவே” என்று என் மனம் பாடினால், இவரோ ஃபார்மர்ஸ் மார்கெட் சென்று பெயர் தெரியாத காய் எதுவும் தென்படாதா என்று கண்ணில் எண்ணெய் விட்டுக்கொண்டு தேடுவார்.  
   
நானும்  ஸுக்கினி கூட்டோ, ப்ரோக்கலி பொரியலோ, மஷ்ரூம்-பேபிகார்ன் மசாலாவோ என்று பண்ணாத ரகம் இல்லை. ஆனாலும் ‘சிறு ஸெலரியும் குழம்பு வைக்க உதவும்‘ எனும் இவர் கொஞசம் ஓவர்.  
   
‘இது ஏன் முதல் வரியை உச்சரித்து இவரைக் கடைக்கு அனுப்புமுன் உனக்கு ஞாபகம் வரவில்லை?’ என்று என்னை நீங்கள் சாடலாம்.  அதற்கு ஒரே காரணம், நாக்கில் (ஏழரை நாள்) சனி ஆரம்பம் – சும்மா பேச்சுக்கு இல்லை டேஸ்டுக்கு என்று கொள்க.  
   
சரி, இத்தனை விளக்கம் வியம்ப வைத்த ஆர்டிசோக் அப்படி என்ன ஒரு விசித்திரமான காய் என நீங்கள் கேட்கலாம். பச்சைக் கலரில் கூம்பின தாமரை ஷேப்பில் ஆனால் அதே ஷேப் இதழ்கள் அட்டாச் ஆன மாதிரி உள்ள ஒரு வஸ்து. (நிறைய லிங்கங்கள் ஒரு பெரிய லிங்கத்தின் மேல் உள்ளது போல்)  
   
இவரின் சூப்போ, பருப்பு முதலிய நம்ம ஊர் சமாசாரம் எதுவும் சேராததும், என் நாக்குக்குக் கொஞ்சமும் ஒப்பாததும், பெயருக்கு பெப்பர், சால்ட் தூவியதுமான படு பாவமாய்க் காட்சியளிக்கும் ஒரு கலவை – தாமரைக் குளத்தில் பாசி படர்ந்த பச்சைத் தண்ணீர் போல. (அது என்ன தாமரையை வேற சும்மா வம்புக்கு இழுத்துகிட்டு!)  
   
“சீப்… சாரி, சூப் கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்துகறேன். வர வழிலதான் ஸ்டார்பக்ஸ்ல லாட்டே சாப்பிட்டேன்” என்று பொய்த்துவிட்டு, ‘நியர் மிஸ்’ என்று மனதில் நினைத்தபடி, பையனின் ஷூவைக் கழட்டுவதற்காக சூப் வாடை துறத்த ஓடினேன்.  
   
அஷ்வினுக்கு உடை மாற்றி இட்லி ஊட்டி மருந்து கொடுத்துவிட்டுக் கிச்சனுக்குள் நுழைந்தால், சூப் தண்ணீர் வற்றி (அடுப்பின் சூட்டிலேயே பாத்திரம் இருந்திருகிறது) ஆர்டிச்சோக் என்னைச் சோக் பண்ண ரெடியாக இருந்தது.

”அடடா, மிஸ் பண்ணிட்டியே! நான் வேணும்னா காயை மாத்திரம் தண்ணி விட்டு மிக்ஸில அடிச்சு, வடி கட்டி, மைக்ரோவேவில் சூடு பண்ணித் தரட்டுமா?” என்று இவரின் கரிசனம் வேறு.  
   
வந்த குமட்டலை அடக்கியபடி, ”பரவால்லே, இன்னொரு நாள் பண்ணி குடிச்சா போச்சு” என்றேன் அவசரமாக.  
   
“யெஸ், யெஸ். இன்னும் 2 பவுண்டு ஆர்ட்டிசோக் ப்ரிட்ஜ்ல இருக்கு” என்று எனக்கு ஆர்ட் அட்டாக் கொடுத்துவிட்டுப் போனார்.

 மதிய சமையல் பற்றி யோசித்தபடி ஃப்ரிட்ஜைத் திறந்தால், தயிர், பால், ஜூஸ் முதலியவற்றைத் துணை நடிகர்கள் ஆக்கிவிட்டுக் கதா நாயகன்/நாயகியாகக் காட்சி அளித்தன ஒரு ஆஸ்பராகஸ் கட்டும், பர்ப்பிள்  கலர் முட்டைக்கோஸும்.  
   
நம்ம ஊரில் சலவை சோப்பை நீல நிறத்திலேயே மக்கள் பார்த்துப் பழகிவிட்டதால், புதிதாய் மஞ்சள் நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நயமான சலவை சோப் கூட ஃப்ளாப் ஆனதாகக் கேள்வி.

அதே போல எனக்கு இளம்பச்சையான முட்டைகோஸ்தான் பரிச்சயம்; மற்றவை ரிஜெக்டட்! ஆனால் அமெரிக்காவில்தான் பர்ப்பிள் கலரில் கோஸ் மற்றும் குடைமிளகாயும் காலிஃபிளவரும் சகஜமாய்ப் புரளுமே! (முன்னொரு முறை பர்ப்பிள் குடைமிளகாயை வாங்கி, வதக்கியபின் அது பச்சை நிறமாக மாறியவுடன், ”இது என்ன சாயம் போன மாதிரி?” என்று அதன்மேல் இருந்த ப்ரேமையைத் துறந்து விட்டார் இவர்).  
   
“வித்யா, இன்னிக்கு ஆஸ்பராகஸ் கறியும், கோஸ் கூட்டும் பண்ணு! அதோட சிம்பிளா ரசம் போதும், அப்போதான் காயோட ருசி (?!) தூக்கும். நான் வேணா காய்கறி நறுக்கித் தரட்டுமா?” என்ற இவரின் ஆஃப்பரை சற்றும் தயங்காமல் ஏற்றுகொண்டேன்.

சும்மா சொல்லக்கூடாது; இவர் கைவண்ணத்தில், சிற்பி கையில் அகப்பட்ட கல்போல் ஆஸ்பராகஸ் கீரைத்தண்டு போலவும், கோஸ் (என்னதைச் சொல்ல!) பூப்பூவாகவும் உருமாறின.  
   
ஆஸ்பராகஸைத் தாளித்து, தண்ணீர் தெளித்து வதக்கிவிட்டு, கோஸைப் பருப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டபோது இவர் டெலிபோனில் பேசுவது கேட்டது. இவர் கூடப் படித்த ஸாம்தான் (சாமிநாதன் அமெரிக்கா வந்து ஸாம் ஆகிவிட்டார்) போனில்.  
   
“வித்யா, நம்ம ஸாம் பக்கத்து மாலுக்கு வந்திருக்கார். Wife, குழந்தைங்க எல்லாரும் இந்தியா போய் இருக்கதாலே ரொம்ப போர் அடிக்குது போல.   மத்தியானம் நம்ம வீட்டுல சாப்பிட்டுட்டு, பேசிட்டு இருக்கலாம்னு கூப்பிட்டு இருக்கேன். சாதம் கொஞ்சம் ஜாஸ்தி வைச்சுடு.”  
   
இதைக் கேட்ட எனக்கு டிஸம்பர் குளிர் ஜூலையிலேயே வந்து விட்டது போல் இருந்தது. பெயர் மாறிவிட்டாலும், நாக்கு ருசி சற்றும் மாறாதவர் சாமிநாதன். எல்லோரும் அவசரத்துக்கு frozen பராத்தா, Healthக்கு நான் ஸ்டிக் பாத்திரம், பேருக்கு எண்ணெய், தேங்காய் என்று மாறினாலும், ஸாம் மனைவி ஸாண்டி (சந்தியாவின் சுருக்கம் தான்) ஜூனியர் விகடன் போல வாரம் இருமுறை பூரி, எண்ணை கொட்டி உருளை ரோஸ்ட், தேங்காய் அரைச்சுவிட்ட சாம்பார் என்று சமைப்பதற்கென்றே கையில் கரண்டியோடு அவதாரம் எடுத்தவள். அவள் உரலில் மாவு இடித்து மட்டும்தான் நான் பார்த்தது இல்லை; மற்றது எல்லாம் from scratch, very apt and top notch.  
   
அவர் வருவதற்குள் வேறு என்ன சமையல் செய்து கொஞ்சம் நல்ல பேர் எடுக்கலாம் என்று யோசிப்பதற்குள், ”அம்மா, எனக்குப் பசிக்குது!” என்று தூங்கி எழுந்த அஷ்வின் வந்து விட்டான்.

இன்னிக்கு ஸாம் வாயில் அரைபடப்போவது ஆஸ்பராகஸ்ஸா அல்லது நானா என்று நினைத்தபடி, குழந்தைக்கு ரசம் சாதத்தைக் கரைத்தேன்.  
   
“என்ன வித்யா, நல்லா இருக்கீங்களா? வீடே மணக்குது, ஒரு பிடி பிடிக்கப் போறேன்!” என்று மூக்கை உரிஞ்சியபடி வந்தார் சாமிநாதன்.

” ஸாமி, you  missed my special Artichoke soup” என்ற இவரின் தம்பட்டம் காதில் விழுந்தது.  
   
 ”நியூ யார்க்கில் (New York) புதுசா சரவண பவன் திறந்து இருக்கு. அடுத்த வீக் எண்டு போறேன். நீங்களும் வாங்களேன்!” என்று, 3 மணி நேரம் கார் ஓட்டி சரவண பவனில் தோசை சாப்பிடவே ஜென்மம் எடுத்தது போல் அழைப்பு விடுத்தபடி டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தார்.  
   
“கீரைத்தண்டு கொஞ்சம் முத்தல்; வாயில் நார் தட்டுப் படுது. ஆனால் crunchy-யா இருக்கறதால டேஸ்ட் நல்லா இருக்கு. கோஸையும், பருப்பையும் சேர்த்து குக்கர்ல 2 விசில் வைச்சுட்டா இன்னும் நல்லா வெந்து பிரமாதமா இருக்கும்” என்று சமையல் டிப்ஸ் அள்ளி விட்டபோதிலும், ஸாம் ருசித்தே சாப்பிட்டார். மனைவி கை மகாத்மியம் மறந்துவிட்டதோ என்னவோ! இவரோ, ”அது கீரைத்தண்டு இல்லே, ஆஸ்பராகஸ்! கோஸ் கலர் கூட different-ஆ இருக்கு இல்லே?” என்று கொள்ளாமல் பெருமை அடித்தார்.  
   
ஸாமி மேலும் ” நான் ஸந்தியாவிடம் ஆஸ்பராகஸை வைச்சு வேற நம்ம ஊரு சமையல் ஐட்டம் என்னல்லாம் பண்ணலாம்னு ட்ரை பண்ணச் சொல்றேன்” என்று, ஆஸ்பராகஸ் தனக்கென்றே கிடைத்த Thesis சப்ஜெக்ட் போல சீரியஸாகச் சொல்லிவிட்டு, “இங்கே நம்ம ஊரு காய்கறி சிலது கிடைக்கறது  இல்லே. அதனாலே இந்தியா போறப்போ வேப்பம்பூ ரசம், சுண்டைக்காய் பச்சடி, வாழைத்தண்டு பொடிமாஸ் எல்லாம் ஒரு பிடி பிடிக்கணும்”. என்று குறைப் பட்டுக் கொண்டே எழுந்தார்.  
   
ரஜினிக்குப் பிறகு வரப்போகும் சூப்பர் ஸ்டார், இந்தியா செல்ல டிக்கட் விலை, ஜார்ஜ் புஷ் என்று பல டாபிக்குகள் கதைத்து விட்டு ஸாம் கிளம்ப, இவர் கிச்சனுக்குள் வந்தார்.

” வித்யா, ஊருக்கு எதுவும் சாமான் குடுத்து விடறதுன்னா குடுக்கச் சொன்னார் சாமி. அப்புறம், Brussel Sprouts பெரிசா வாங்கினா உனக்கு நறுக்க வசதின்னு வாங்கினேன்” என்றார்.  
   
“பெரிசு முத்தல், சிறிசு இளசு” என்று ஆத்திச்சூடி போன்று நறுக்கென்று நான் போதித்து இருந்த பொன்மொழியை மறந்து விட்டார் போல என்று சமதானம் ஆகும் முன், ” Cactus Leaves and Water  Chestnuts வெச்சு ஏதாவது டிஷ் பண்ணு; fridge bottom  ஷெல்ஃபில இருக்கு” என என்னைக் கிளீன் போல்டு  ஆக்கிவிட்டுச் சென்றார்.

இப்போதெல்லாம் வாரம் ஒரே ஒரு புதுக் காய் தான் என்று இவரை restrict பண்ணி வைச்சிருக்கேன்.  
   
புதுசா காய் அகப்பட்டா ரெசிப்பிக்கு என்னைக் கேளுங்க, இல்லே இருக்கவே இருக்கு சாண்டியோட blog
www.புதுக்காய்கறி.com 

- ப்ரியா ராம்


மறுமொழி அளிக்கவும்

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்

வகைகள்