murugappan எழுதியவை | பெப்ரவரி 19, 2008

கலிஃபோர்னியா தீ

ஸான்றா ஆனா காற்று வந்து தீபங்கள் எற்றிவைக்க

        யாகம் ஒன்று நடந்தது இங்கு!
நிலமே நெருப்பானது, முச்சுக் காற்றே விஷமானது

        புகையால் சூரியன் கூட கருப்பானது
இயற்கை செய்த இந்த வேள்விக்கு

        எங்கள் இல்லங்கள் இலக்கானது
அன்று நடந்த ஆக்ரோஷ தாண்டவத்தில்

        நிலவின் கருப்புக் கரைக்குக் காரணம் புரிந்தது

வானத்தோடு சேர்ந்து வாழ்க்கையும் இருண்டது

காடுகளோடு சேர்ந்து கனவுகளும் கருகின

வீடுகளோடு சேர்ந்து நினைவுகளும் எரிந்தன (…1)

தீயே நீயும் தாய் தானே

     உடலின் உள்ளே நீதானே!

உயிரெனும் உருவம் தரித்து வந்து

     உடம்பெனும் இயந்திரம் இயக்கிவைத்தாய்

இருந்தும் ஏன் எங்களை எரிக்க வந்தாய்?
உன்னில் ஈரம் இல்லை என்றா

     மண்ணில் ஈரம் எடுக்க வந்தாய்!!
விண்ணில் புகையைத் தூவிவிட்டு

     கண்ணில் கண்ணீர் கசியவைத்தாய் (…2)

வாழ்க்கையில் முக்கியம் எதுவென்று

     சிந்திக்க சில நிமிடம் கிடைத்ததன்று
பட்டங்கள் இரண்டு, பத்திரம் இரண்டு

     புகைப்படங்கள் நாலு, அவ்வளவுதான்

மொத்த வாழ்க்கையை ஒத்தப்பையிலே எடுத்துக்கொண்டு

     மிச்சம் அத்தனையும் விட்டுச் சென்றோமே!!

    

வாழ்ந்ததில் முக்கியமெது, வாழ்க்கையில் முக்கியமெது

     வாழ்க்கையின் முக்கியத்துவமெது

என்று கற்றுத்தந்த தீயே உனக்கு நன்றி!! (…3)

தீ ஓரெழுத்து என்றாலும்

     தலை எழுத்தை மாற்றும் சக்தியன்றோ
தீயே வா எரித்துப்பார்

     அன்பைத்தான் தந்திடுவோம்!

பூதமென்று சொன்னாலும்

     உன்னைத்தான் கும்பிடுவோம்

வெப்பம் வந்த பின்னால்தான்

    பூமியில் வாழ்க்கை வந்ததென்று

அக்கினியே உன்னைத்தான் நம்பிடுவோம் !!   (…4)

ஒவ்வொரு சோதனையும் ஒரு சராசரி மனிதனை

   உயர்ந்த மனிதனாக்க இயற்கை செய்யும் முயற்சி !!

இயற்கையே உன் முயற்சிக்கு இன்று வெற்றி!!

தீயணைப்புப் படை வீரரைக்

   கண் கண்ட தெய்வமாக்கினாய்!

ஸ்ட்ரேஞ்சரை நண்பர்களாகவும்

    நண்பர்களை நெருங்கிய நண்பர்களாகவும்

ஊரையே சமூகமாகவும் மாற்றினாய்

உன் யாகத்தால் மரங்கள் கருகியிருக்கலாம்

   மனித நேயம் மலர்ந்து நிற்கின்றது

தன்னம்பிக்கையும் தைரியமும் வளர்ந்து நிற்கின்றது

இயற்கையே உன் முயற்சிக்கு இன்று வெற்றி!!   (…5)

- முரு முருகப்பன்


மறுமொழி அளிக்கவும்

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்

வகைகள்