கோட்டாளம் எழுதியவை | மார்ச் 12, 2008

வேறுபாடுகளிலும் ஒருமைப்பாடு

தென் கலிஃபோர்னியாவைச் சார்ந்த நூற்றைம்பது இந்திய நடனக் கலைஞர்கள் பங்கேற்ற வேறுபாடுகளிலும் ஒருமைப்பாடு என்ற நிகழ்ச்சி சாண்டியேகோ இந்திய அமெரிக்கக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு 2008, மார்ச்சு முதல்தேதியன்று பாவே நடனக் கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. கழகத்தின் இயக்குனர் பேராசிரியர் மாதவன் வரவேற்புரை வழங்க, அதன் ஆதரவாளர்களில் ஒருவரான வினீத் குப்தா தற்கால இளம் பொறியாளர்களும், தொழிலாளர்களும் கழகத்தின் நற்செயல்களில் ஈடுபட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். பிறகு அமெரிக்காவில் பல துறைகளிலும் ஒளிவீசிக் கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு வழங்கப் படும் சக்கர விருதுகளும், கல்வியில் சிறந்த மாணவர்களுக்குக் கலாச்சாரப் பாகுபாடின்றி வழங்கப் படும் காந்தி உதவித் தொகைகளும் விளக்கப் பட்டன. அதைத் தொடர்ந்து ரமேஷ் வெங்கட்ராமன் மேற்பார்வையில் இயக்கப்பட்ட நடன நிகழ்ச்சியை நீலு பரத்வாஜ் முன்னின்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒடிஸ்ஸி, பரதநாட்டியம், கதக் போன்ற பண்டைய நடனங்களும், கும்மி, பானிஹாரி (நீர்க்குடம்), லவானி, அறுவடை விழா, மழையின் சிறப்பு போன்ற மக்கள் நடனங்களும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நடனங்களும் இடம் பெற்றன. அவை மகாராஷ்டதிரம், ஹரியானா, ஒரிஸ்ஸா, குஜராத், வங்காளம், தமிழ்நாடு, கேரளம், கோவா முதலிய மாநிலங்களின் கலை வடிவங்களை எடுத்துக்காட்டுவனவாக அமைந்திருந்தன. இதில் நடனமாடியவர்களில் பெரும்பான்மையோர் ஏழு வயது முதல் முப்பது வயது (என்று வைத்துக்கொள்வோம்) வரையுள்ள சாண்டியேகோவைச் சேர்ந்த பெண்கள். லாஸ் ஏஞ்சலஸிலிருந்தும் ஒரு குழுவினர் வந்திருந்தனர்.  நிறைவுக்காட்சியில் கலைஞர்கள் அனைவரும் மேடையில் வந்து ஒரே இந்திய அன்னையின் பல கலைவடிவங்களாக ஒருங்கிணைந்து நின்று அவள் பெருமைகளைப் போற்றித் துதித்தனர்

.இந்நிகழ்ச்சியின் மூன்று மணிக் காட்சியின்போது பெர்க்கிளியிலுள்ள கலிஃபோர்னியாவின் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜ் செட்டி சிறப்புரை ஆற்றினார். அவர் இந்தியர்கள் அமெரிக்காவில் ஈடுபடக்கூடிய தொழில்களைப் பற்றியும், அவர்கள் இந்தியாவுக்கு எவ்வாறு பெருமையளிக்கலாம் என்பது பற்றியும் பேசினார். மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் பணியாற்றுவது மட்டுமல்லாமல், இந்தியர்கள் பிற தொழில்களையும் மேற்கொள்ளலாம் என்றார். எடுத்துக்காட்டாக, தாம் நன்கறிந்த பேராசிரியர் தொழிலின் சிறப்புகளை எடுத்துரைத்தார். பேராசிரியர்கள் வாரத்தில் சில மணி நேரமே கற்பிக்க வேண்டும் என்றும், அதிக நேரம் ஆராய்ச்சியிலேயே செலவிடப் படுகிறது என்றும் கூறினார். இத் தொழிலிலும் நல்ல வருமானம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்

.ஏழு மணிக் காட்சியின்போது சிறப்புரை ஆற்றிய ஓய்வுபெற்ற பேராசிரியையும், மிங்கை அகிலவுலகக் காட்சியகத்தின் நிறுவுனருமாகிய மார்த்தா லாங்நெக்கர் வேறொரு விதமான ஒருமைப்பாட்டையும் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் அந்தணர் முதல், ஊழியர் குலம் வரை பல வகுப்புகள் தொன்றுதொட்டு இருந்தபோதிலும், அவர்கள் அனைவரும் இவ்வுலகினும் மேம்பட்ட ஒரு பரம்பொருளைத் தேடியடையும் ஆன்மீக வாழ்க்கை முறையில் ஒன்றுபட்டே இருந்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார். உலகில் கலை, ஆன்மீக உணர்வுகள் நசிந்து வரும் இன்றைய நிலையில், இந்திய கலாச்சார மதிப்புக்கள் அமெரிக்காவுக்கும் மிக அவசியம் என்பதை வலியுறுத்திப் பேசினார். பார்வையாளர்களிலிருந்த இந்தியர்களை நோக்கி எனவே, உங்கள் கலாச்சாரப் பின்னணியை மறத்துவிடாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

- கோட்டாளம், ப்ரியா ராம்  


மறுமொழி அளிக்கவும்

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்

வகைகள்