கோட்டாளம் எழுதியவை | ஏப்ரல் 11, 2008

வீண் பா

நன்றாகத் தூக்கம் வந்தது. ஏனென்றால் நற்றமிழ் இலக்கணம்என்ற நூலைப் படிக்க முயன்றுகொண்டிருந்தேன். அதைப் போய்ப் படித்தால் பின்பு தூக்கம் வராதா என்று நீங்கள் கேட்பீர்கள். ஆயினும், – சிரிக்காதீர்கள் – ஔவையார், திருவள்ளுவர் போன்ற புலவர்கள் எழுதியது போல் வெண்பா எழுத வேண்டுமென்று எனக்கொரு ஆசை! அதனால் யாப்பிலக்கணப் பகுதியில் வெண்பா இலக்கணத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். வெண்பா நான்கடியில் அமைந்து இயற்சீர் வெண் தளையும் வெண்சீர் வெண் தளையும் கொண்டிருக்க வேண்டுமாம். இயற்சீர் வெண்டளை என்பது மாமுன் நிரையும், விளமுன் நேரும் வருவதாம். வெண்சீர் வெண்டளை என்பது காய்முன் நேர் வருவதாம். சரி, இத்துடன் நிறுத்துகிறேன்; நீங்கள் கொட்டவியை அடக்கிக்கொள்ளுங்கள்.

அப்போது தற்செயலாக அங்கு வந்த என் மனைவி என் முகத்தைக் கண்டு திடுக்கிட்டவளாக, ‘என்னங்க, என்ன ஆச்சு? ஓருமாதிரியா முழிக்கிறீங்க!’ என்றாள். 

‘ஆ, ஒன்றுமில்லை! ஒரு வெண்பா எழுதலாம் என்றிருக்கிறேன். இதோ பார்த்தாயா?’ என்று சொல்லி, நான் படித்துக்கொண்டிருந்த பக்கத்தை அவளிடம் காட்டினேன். 

அதைக் கண்டதும் அவள், ‘ஆகா, நீங்கள் எவ்வளவு சிறந்த அறிவாளி!’ என்று வியந்து என்னைப் பாராட்டினாள் என்று நீங்கள் நினைத்தால், என் மனைவியைப் பற்றி உங்களுக்குத் தெரியாது என்று பொருள். 

மாறாக, ‘ஒங்களுக்கு எதுக்குங்க இந்த வம்பெல்லாம்? உண்டான வேலைய ஒழுங்காப் பாத்து குடும்பத்தக் கவனிக்கிறதப் பாருங்க’ என்றாள். 

அதைக் கேட்ட மாத்திரத்தில் சீறி எழுந்தது ஒரு நேரிசை வெண்பா. 

மாமுன் நிரையென்றார் காய்முன்னோ நேரென்றார்

நாமும் கவிபுனையப் போனாலோ – நாமுந்தி

நேர்தொழில் நீர்விட்டுப் பாட்டெழுதப் போகுங்கால்

சீர்கெடும் என்றாள் துணை  

 

இலக்கணம் அறிந்த ஒரு நண்பர் இதைப் படித்துப் பார்த்துவிட்டு, ‘சீர் கெடாமல்தானே எழுதியிருக்கிறீர்?’ என்றார்.  

அவருக்கு ஒரு குறள் வெண்பாவால் பதிலளித்தேன்  

புனைசீர் கருவிளங்காப் பைந்தமிழ்ப் பேதை

மனைசீர் கருதுவாள் முன்பு 

 - கோட்டாளம்


மறுமொழி அளிக்கவும்

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்

வகைகள்