ஜெயபாண்டியன் கோட்டாளம் எழுதியவை | ஜூன் 9, 2008

பண்டைத் தமிழர் வாழ்க்கை முறை

[ ஸ்ரீமந்திரில் முருகன் திருவுருவம் நிறுவப்பட்ட முதலாண்டு நிறைவு விழா (1999) நினைவுமலரில் பதிவான கட்டுரை இங்கு மறுபதிக்கப் படுகிறது. ]

 

சமுதாயம் என்பது யாது? ஒழுங்குபட்ட அமைப்புடன் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் மக்கள் கூட்டமே

சமுதாயம் என்று மனிதவின இயல் (Ethnology) அறிஞர்களால் வரையறுக்கப் படுகிறது. ஆனால் சில மனிதப்புவி இயல் (Anthropogeography) அறிஞர்கள் இது குறுகிய வரையறை எனக்கருதி, ஒரு புவியியல் அமைப்பிலுள்ள இயற்கை வளங்களும், தாவர, விலங்கினங்களும் அடங்கிய கூட்டுச் சேர்க்கையே சமுதாயமென்றும், அந்தச் சூழ்நிலையில் வாழும் மக்கள் அந்தச் சமுதாயத்தின் ஓர் அங்கமே என்றும் கூறுகின்றனர்.

 

தற்கால அரிஞர்களால் புதுமையாகக் கொள்ளப்படும் இதே கருத்து இரண்டாயிரம் ஆண்டுகட்கும் முற்பட்ட நம் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருக்குமாயின், நம் மூதாதையரின் அறிவாற்றலையும், ஆராய்ச்சித் திறனையும் என்னென்பது!

 

தொல்காப்பியர் உலகைப் புவியியல் அமைப்புக்கேற்றவாறு ஐந்து திணைகளாகப் பிரிக்கிறார். அவை குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பனவாகும். இவற்றுள், எடுத்துக்காட்டாக குறிஞ்சி சமுதாயத்தின் வாழ்க்கை அமைப்பை மட்டும் இங்கு விரிவாகக் காணலாம்.

 

மலைகள் அடங்கிய நிலப்பகுதியும், மலைப்பகுதிகளில் இயற்கையாக அமைந்திருக்கும் பொருள்களும், உயிரினங்களும், அங்கு வாழும் மக்களின் செயல்களும் மொத்தமாகச் சேர்ந்து குறிஞ்சி என்ற சமுதாயத்தை உருவாக்குகின்றன. பொருள்கள், தாவரங்கள், விலங்குகள், மக்கள் ஆகிய அங்கத்தினரின் வாழ்க்கைகள் ஒன்றுடன் ஒன்று சார்ந்து, பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.

 

மலைவாழ் மக்கள் மலைப்பகுதிகளில் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது இயல்பேயன்றோ? எனவே, அந்நிலத்துக்கே உரித்தான விலங்குகள், பறவைகள், மரங்கள், மலர்கள், நீர்நிலைகள் என்னென்ன என்று முதலில் காணவேண்டும். பின்னர் இப்பொருள்களினின்றும் அங்கு வாழும் மக்கள் தங்கள் உணவையும் உடையையும் எவ்வாறு பெறுகிறார்கள் என்று காணலாம். அதனால் அவர்கள் என்னென்ன தொழில்கள் செய்பவராதல் வேண்டும் எனவும் விளங்கும். பிறகு அவர்கள் பொழுதுபோக்கு, விளையாட்டு, வழிபாடு இவற்றையும் காணலாம்.

 

மலைப்பகுதிகளில் காணப்படும் விலங்குகள் புலி, கரடி, யானை, சிங்கம், ஆடு முதலியன. பறவை இனங்களில் முதன்மையானவை மயிலும், கிளியும். குறிஞ்சி, வேங்கை, கடம்பு போன்ற மலர்களும், மூங்கில், சந்தனம், தேக்கு, அசோகம், நாகம் போன்ற மரங்களும் மலைப்புறங்களில் காணப்படுகின்றன. அருவியும், சுனையும் அந்நிலத்தின் நீர்நிலைகள்.

 

மலைப்பகுதிகளில் மலர்கின்ற குறிஞ்சி மலராலேயே இத்திணைக்கும் அப்பெயர் உண்டாயிற்று. இங்கு வாழும் மக்களும் குறவர், குறத்தி என அழைக்கப் பட்டனர்.

 

இம் மக்கள் மலை நிலத்தில் வளரும் மலையரிசியையும், தினையையும், வள்ளிக் கிழங்கையும் உண்டு வாழ்ந்தனர். இங்கு மது நிறைந்த மலர்கள் அதிகமாதலால், அவற்றிலிருந்து உருவாகும் தேனையும் எடுத்து உண்டனர். ஆடுகளையும், சில பறவைகளையும் வேட்டையாடி மாமிசம் உண்டனர், மரவுரியும், தழையுடையும் ஆடையாக உடுத்தினர். ஆகவே, இவர்கள் தொழில்கள் வேட்டையாடுதல், தேனெடுத்தல், தினை காத்தல், கிழங்கெடுத்தல் என அறியலாம். வேட்டைக்கு வேல் என்ற ஆயுதத்தைக் கையாண்டனர்.

 

கொடிய விலங்குகளிடம் அகப்படாமல் மறைந்து வாழ்வதும், அவற்றை ஏமாற்றித் தப்புவதும் இவர்களுக்கு அவசியமாக இருந்திருக்கலாம். இவ்வாழ்க்கை முறைக்குக் களவு முறை என்று பெயர். இங்கு களவு என்பது பிறர் அறியாவண்ணம் செய்யும் செயலாகுமேயன்றி, பிறர் பொருளை அபகரிக்கும் திருட்டு அன்று.

 

குளிர்காலத்தில் குளிரின் கடுமை மலைப்பகுதிகளிலேயே அதிகமாக இருப்பது தெளிவு. குளிரைப் போக்குவதற்காக குறவரும், குறத்தியரும் வெறியாடல் என்ற ஒரு துடிப்பான நடனம் ஆடுவதைப் பொழுதுபோக்காகவும் விழாக்கால நிகழ்ச்சியாகவும் கொண்டிருந்தனர். இவர்கள் விழாக்காலங்களில் இசை எழுப்புவதற்குக் கையாண்ட தாள இசைக்கருவி தொண்டகப்பறை எனவும், நாத இசைக்கருவி குறிஞ்சி யாழ் எனவும் அழைக்கப் பட்டன.

 

பகல் நேரங்களைவிட இரவில் குளிர் அதிகமானதால், வெறியாடல் இரவு நேரங்களில் நடைபெற்றிருக்க வேண்டும். நாளடைவில் இந்நிலத்தின் விழாக்காலம் இரவாக அமைந்தது. இதனால்தான் குறிஞ்சியின் கலாச்சாரத்தை ஏனைய கலாச்சாரங்களிலிருந்து பாகுபடுத்தும் பொருட்டு, அதன் பெரும்பொழுது (season) குளிர்காலமென்றும், சிறுபொழுது (time of day) நள்ளிரவு என்றும் பொருள் இலக்கணம் குறிப்பிடுகிறது.

 

ஐந்திணை மக்களும் தத்தம் சூழ்நிலைகளில் அமைந்துள்ள இயற்கையின் சக்திகளைக் கண்டு வியந்து போற்றினர். அவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட (supernatural) சக்தி ஏதும் இருப்பதாக நம்பவில்லை. ஆனால் தங்கள் வாழ்க்கைக்கு அடிப்படையாகத் திகழும் இயற்கைச் செல்வங்களைப் போற்றித் துதித்தனர். இயற்கையின் ஓர் அங்கமே மக்கள், இயற்கை செலுத்தும் வழியில் இயற்கை நெறிகளினின்றும் பிறழாமல் வாழவே மனிதனால் முடியும் என்ற உண்மைகளை உணர்ந்திருந்தனர். இயற்கையின் சக்திகளைத் தெய்வங்கள் என்று அழைத்தனர்.

 

மழை, நதி, மேகம், காற்று போன்ற பல இயற்கைச் சக்திகளும் குறிஞ்சி நிலத்திலிருந்து தோன்றி மற்ற நிலப்பகுதிகளுக்குப் பரவுவதால், குறிஞ்சி நிலம் தூய்மையான அழகுடனும் இளமையுடனும் இலங்குவது கண்கூடு. இவ்வழகிய தோற்றத்தைக் கண்டு வியந்த பண்டைத் தமிழ் மக்கள், மலைப்பகுதிகளின் உயிரோட்டத்தை நிலைநிறுத்தும் இயற்கைச் சக்தியை ‘முருகு’ என்றும் ‘சேய்’ என்றும் அழைத்தனர். பிற்காலத்தில் மனிதவுருவ (anthropomorphic) வழிபாடு தோன்றியபின், கொள்கையளவில் இருந்த முருகு என்ற தெய்வம் முருகன் ஆனான்.

 

இதுகாறும் கூறியவற்றால் குறிஞ்சித் திணையின் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, தாள இசைக்கருவி, தொழில், பண் இசைக் கருவி முதலியன தெளிவாயின. இவை அந்நிலத்தின் கருப்பொருள்கள் எனப்படும்.

 

“தெய்வ முணாவே மாமரம் புட்பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

அவ்வகை பிறவுங் கருவென மொழிப.”

          தொல்காப்பியம், 964

 

பண்டைத் தமிழ் இலக்கியம் மக்களின் இல்வாழ்க்கையான அகவாழ்வையும், அரசியல் வாழ்க்கையான புறவாழ்வையும் விவரிக்கின்றது. ஒரு நதி எவ்வாறு குறிஞ்சி நிலத்தில் தோன்றி, பின் பாலை, முல்லை, மருதம், தெய்தல் ஆகிய நிலங்களில் ஓடிக் கடலை அடைகிறதோ, அதேபோன்று ஆணும் பெண்ணும் நடத்தும் இல்வாழ்க்கையும் இளமை நிலையில் தொடங்கி, பல நிலைகளைக் கடந்து இறுதியில் துறவு நிலை அடைவதாக உருவகப் படுத்தினார்கள். ஆகவே வாழ்க்கை நிலைகளுக்கும் நிலங்களின் பெயர்களையே இட்டனர்.

 

“ஐந்திணை உடையது அன்புடைக் காமம்”

 

“குறிஞ்சி பாலை முல்லை மருதம்

நெய்தல் ஐந்திணைக்கு எய்திய பெயரே”

                             – நம்பி அகப்பொருள், 4, 6.

 

இல்வாழ்வின் முதல் நிலை அழகும் இளமையும் வாய்ந்த தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் கண்டு விரும்புவதாகும். இது பிறர் அறியாவண்ணம் செய்யும் செயலாதலால் இந்நிலை களவு நிலை எனப்படும். இது குறிஞ்சி நிலத்தில் நடைபெறுவதாகக் கூறுவது இலக்கிய மரபு.

 

தலைவன் வேட்டைக்குச் செல்லும்போது அருவியில் நீராடிவிட்டுக் கூந்தலை உலர்த்திக்கொண்டிருக்கும் தலைவியைத் தற்செயலாகக் காண்கிறான். கண்டதும் இவள் வானுலகப் பெண்ணோ, அழகிய மயிலோ, அன்றி மானிடப் பெண்தானோ என மயங்குகிறான்.

 

“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலுமென் நெஞ்சு”

          திருக்குறள், 1081

 

மயில் குறிஞ்சி நிலப் பறவை என்பதை நோக்குக.

 

பிறகு இருவரும் ஒருவரையொருவர் மீண்டும் காண விழைகின்றனர். முதலில் சந்தித்த இடத்துக்குத் தலைவன் வரமாட்டானா என்று தலைவியும், தலைவி வரமாட்டாளா என்று தலைவனும் ஏங்குகிறார்கள். வேட்கை மிகவே, வந்தால் காணலாமே என்ற நம்பிக்கையுடன் தலைவன் மறுநாள் அங்கு செல்கிறான். அதே நம்பிக்கையுடன் தலைவி ஏற்கெனவே அங்கு வந்து ஏதுமறியாதவள் போல் நின்றுகொண்டிருக்கிறாள். இதனால், ஒவ்வொருவர் உள்ளத்திலும் உள்ள களவு எண்ணங்கள் மற்றவருக்கு வெளியாகின்றன. இதற்கு இடந்தலைப்பாடு என்று பெயர்.

 

அன்பு மேலீட்டால் தலைவன் தலைவிக்கு ஒரு தழை உடை அளிக்கிறான். அதை உடுத்தினால் தன் களவு தாய்க்குத் தெரிந்து விடுமே என தலைவி அஞ்சுகிறாள். தலைவனிடம் திருப்பிக் கொடுத்தாலோ, தலைவன் தனக்கு அவன் மீது அன்பில்லாததாக நினைக்கக் கூடுமே என அஞ்சுகிறாள். என் செய்வாள் பேதை!

 

“குன்றநாடன்

      உடுக்கும் தழைதந் தன்னே யவையா

      முடுப்பின் யாயஞ் சுதுமே கொடுப்பிற்

      கேளுடைக் கேடஞ் சுதுமே”

          நற்றிணை, 359

 

தலைவனைத் தான் விரும்பிய போதெல்லாம் சந்திக்க முடியாமல் தலைவி வருந்துவதால் அவள் உடல் மெலிவடைகிறது. அதைக் கண்ட தலைவியின் தாய்மார் உண்மையான காரணத்தை அறியாமல் தலைவியின் மெலிவு முருகனால் வந்தது என்றெண்ணி முருகனுக்குப் பூசை நடத்துகின்றனர். இந்தப் பூசை நடத்தும் பூசாரி வேலைக் கையிலேந்தி ஆவேசத்துடன் ஆடுவான். இதற்கும் வெறியாடல் என்று பெயர்.

 

தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் விரும்புதல் இயற்கையின் விதிகளால் நடப்பதால், அது அறத்தின் வழிப்பட்ட செயலேயாகும். இக்களவு தானே வெளிப்படுமுன் உரிய முறைலில் பெரியோருக்கு வெளிப்படுத்துதல் அவசியமாகிறது. இருவருக்கும் தீங்கோ இழுக்கோ ஏற்படாமலும், அவர்தம் நிலை தாழ்ந்திடாமலும் உரிய சொற்களால் எடுத்துரைத்தலில் தலைவியின் தோழி முக்கியப் பங்கு வகிக்கிறாள். பிறகு பெரியோர் தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். இது அறத்தொடு நிற்றல் எனப்படும்.

 

தலைவனும் தலைவியும் திருமணம் செய்து அதற்குப் பின் வாழ்கின்ற வாழ்க்கைக்குக் கற்பு என்று பெயர். களவின் வழி வந்த கற்பு சிலருக்குத்தான் அமைகிறது. எல்லோருக்கும் களவு அமைவதில்லை. களவு இல்லாமல் பெரியோர் சேர்த்து வைத்ததால் நிகழும் இல்லற வாழ்க்கைக்குக் களவின் வழி வாராக் கற்பு என்று பெயர்.

 

“களவின் வழிவந்த கற்பும் பொற்பமை

களவின்வழி வாராக் கற்புமென் றாங்கு

முற்படக் கிளந்த கற்பிரு வகைத்தே”

          நம்பியகப்பொருள், 55.

 

ஒவ்வொருவருக்கும் இல்லற வாழ்க்கை உண்டாவதற்கு இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளன. ஒன்று, முதலில் காதல் நேர்ந்து பிறகு அது இல்லற வாழ்க்கையாக மாறுதல். மற்றொன்று, காதல் ஏற்படாமல் பெரியோர் இணைத்து வைக்கும் வாழ்க்கை. இந்த இரு சாத்தியக்கூறுகளையும் (possibilities) வள்ளி, தெய்வானை என்ற இரு தெய்வங்களால் நம் முன்னோர் குறித்தனர் போலும்.

 

பண்டைத் தமிழர் வாழ்க்கை முறையைப் பற்றிய செய்திகளையும், கருத்துக்களையும் மேலும் படித்து இன்புற விரும்புவோர் கீழ்க்கண்ட நூல்களைப் படிக்கலாம்.

 

Social Life of the Tamils, The Classical Period; S. Singaravelu, Depatrment of Indian Studies, University of Malaya, Kuala Lumpur; Marican & Sons (Malaysia) Ltd., 1966

 

Pre-Aryan Tamil Culture; P. T. Srinivasa Iyengar, Madras University; Asian Educational Services, New Delhi, 1985.

 

நற்றமிழ் இலக்கணம்; டாக்டர் சொ. பரமசிவம், பச்சையப்பன் கல்லூரி, சென்னை; பட்டுப் பதிப்பகம், 1990


மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: