ஜெயபாண்டியன் கோட்டாளம் எழுதியவை | ஓகஸ்ட் 7, 2009

தமிழ்க் கல்வியின் அவசியம்

இன்றைய நிலையில் ஆங்கிலம் உலக மொழியாகக் கருதப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுகளும், வணிகமும் ஆங்கிலத்திலேயே மேற்கொள்ளப் படுகின்றன. இந்நிலையில் வாழ்வில் முன்னேற விரும்பும் எவரும் ஆங்கிலம் கற்றுக்கொள்வது அவசியமாகிறது. ஆங்கிலம் பேசும் நாடுகளிலேயே வேலை வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. அந்நாடுகள் தொழில்நுட்பத்தில் முன்னேற்றமடைந்து காணப்படுகின்றன. எனவே அந்நாட்டினருடன் வணிகத் தொடர்பு வைத்திருப்பதாலும் அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பச் சேவைகளைச் செய்து கொடுப்பதாலும் நாம் ஆதாயமும், ஊதியமும் பெறுகிறோம்.

ஒரு அடி பின்வாங்கி நின்று சற்றே தொலைநோக்குடன் இந்நிலையைக் கண்காணித்துச் சிந்திப்போம். தமிழர்களாகிய நாம் முதலில் ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டு அதன்பின் ஒரு அறிவியல், தொழில்நுட்பம் அல்லது வணிகம் போன்ற ஒரு துறையில் தேர்ச்சிபெற வேண்டியுள்ளது. ஆனால் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் முதற்படியிலேயே தமக்கு வேண்டிய துறையில் தேர்ச்சியடையலாம். ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு ஒரு நியாயமற்ற முன்வாய்ப்பு இருக்கிறது. இந்நிலை நீடிக்கும்வரை நாம் திறமைசாலிகளாக இருந்தாலும், மற்றவர்களைப் பின்பற்றியே செல்லவேண்டியிருக்கும். அவர்கள் பின்தங்க நேர்ந்தால் நாமும் பின்தங்கவேண்டியிருக்கும். அவர்களை முந்திக்கொண்டு நாம் முன்னேறும் காலம் எப்போது தோன்றும்?

ஆங்கிலம் உலகில் மேலோங்கி நிற்பது இன்றைய நிலை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அவ்வாறு இல்லை. பிரெஞ்சு உலகமொழியாகும் என்ற எதிர்பார்ப்பு சில பத்தாண்டுகளுக்கு முன் இருந்திருக்கிறது. அதனால்தான் Lingua Franca என்ற சொல்லாட்சி இன்னும் பழக்கத்தில் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன் இலக்கியம், அரசியல், வணிகம் போன்ற துறைகளில் தமிழ் ஒங்கி நின்றதை வரலாற்று நூல்களிலிருந்து அறிகிறோம். அந்நிலை மீண்டும் வராது என்று நாமே ஏன் எண்ணிக்கொள்ள வேண்டும்?

மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத்தில் மேலோங்கி நிற்பதும் இன்றைய நிலையே! அந்நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்போது அவற்றைத் துணையாக நம்பியிருக்கும் மற்ற நாடுகளின் பொருளாதாரங்களும் வீழ்ச்சியடைவதை இன்று கண்கூடாகக் காண்கிறோம். இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் அவசியமாயுள்ளன. இதற்குத் தேவையான உயர்நிலை அறிவு நூல்கள் தமிழில் இல்லாத குறைபாடு நிலவுகிறது. இக்குறைபாடு எவ்வாறு உண்டாகியது? நம் முன்னோர் தம் தொழில்நுட்ப அறிவுகளைத் தமிழில் எழுதி வைக்காததாலும் மேல்நாட்டு அறிவு நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்க்காததாலும் உருவானது. இனி பல நூற்றாண்டுகள் கழித்து வரும் நம் சந்ததியினர் தமிழில் அறிவியல் ஆய்வுகள் நடத்தவும் தொழில்நுட்பச் சாதனங்கள் உருவாக்கவும் விழைந்தால், அவர்களுக்குத் தேவையான இலக்கியச் செல்வங்கள் இருக்குமாறு செய்து விட்டுச்செல்வது நம் கடமையன்றோ?

இன்றைய இளைஞர் பிழைப்புக்காக ஆங்கிலம் கற்று மேல்நாட்டினருக்கு ஊழியம் செய்து பொருளீட்டல் புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால் முன்பு இளைஞராயிருந்து முதிர்ந்தவர்கள், வாழ்வின் கடமைகள் நிறைந்து ஓய்வுபெற்றவர்கள், தத்தம் துறைகளிலுள்ள அறிவுக் களஞ்சியங்களைத் தமிழுக்குக் கொண்டுவர முயற்சிக்கலாம். சில பத்தாண்டுகள் முன்பு உ.வே. சாமிநாதையர் என்பார் கரையான் அரித்துக்கிடந்த ஓலைச்சுவடிகளிலிருந்து பல பழந்தமிழ் இலக்கிய நூல்களை மீட்டு அச்சேற்றியதாலேயே தமிழ் இன்று இலக்கிய வளம் மிக்கதாக நமக்குத் தோன்றுகிறது. இதற்கு அடுத்த படி அறிவியல் தொழில்நுட்ப நூல்களைத் தமிழில் ஆக்குவதாகும்.

இதைப்பற்றிய உங்கள் எண்ணங்களை அறிய ஆவலுடனிருக்கிறேன். தங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.


மறுவினைகள்

  1. நல்ல பதிவு.

    என்னைப் போன்ற பலர் (1960 -களில் பள்ளிப் படிப்பு முடித்தவர்கள்) தமிழ் மீடியத்தில் பள்ளிக் கல்வி பெற்றனர். அப்போது சென்னை, மதுரை போன்ற பெரிய நகரங்களில் ஒரு பிரிவு (section) ஆங்கில மீடியம் இருந்திருக்கலாம். அவை தவிர அனைத்துப் பள்ளிகளிலும் SSLC வரை தமிழ் மீடியம் ஒன்றே. அறிவியல், கணிதம், சமூகவியல் ஆகியவை தமிழில்தான் பயின்றனர்.

    அவர்களுக்காக நூல்கள் எழுதப்பட்டன. படிப்படியாகக் கலைச் சொற்கள் தமிழில் வந்தன.

    இப்போதோ அரசினர் பள்ளிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகள் ஆங்கிலத்தில் நடக்கின்றன. இது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே இல்லை-இல்லை- LKG இலிருந்தே ஆங்கில மீடியத்தில் கற்பிக்கப் படுகிறது. ஒருபக்கம், மாணவர்கள் தம் பகுதி, ஊர், மாநிலம், பற்றியும், வீடு, சுற்றம், அண்டை அயலார் வாழ்க்கை முறை பற்றியும் சரியான படி அறியாமல் கல்வி முடிந்து விடுகிறது. மொழிப் பற்றும் இல்லை. மறுபக்கம், ஆங்கில மீடியத்தில் கற்பதால், அவர்கள் கல்லூரி வந்தவுடன், மேற்படிப்பு சிரமம் இல்லாமல் தொடர முடிகிறது. ( நம் காலத்தில் P U C வந்தவுடன் பல மாணவர்கள் தேங்கும் நிலை வந்தது; அது இப்போது இல்லை.)

    அவ்வாறு தமிழை ஒரு மொழியாக மட்டுமே பத்துவரை படிப்பவர்களுக்கு மொழியின் மீது பற்று வரக் காணோம். அவர்கள் தமிழ்ச் செய்தித்தாள்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் படிப்பதில்லை எனத் தோன்றுகிறது. அப்படி இருக்கும் போது, தமிழில் அறிவியல், பொறியியல், பொருளாதாரம் போன்றவை எழுதினால் படிப்பவர் இருப்பார்களா என ஐயமே.

    அதே சமயம், ஒரு காலத்தில் – ஒரு நூற்றாண்டு காலம் போதும் – தமிழ் வெறும் பேச்சு மொழியாக மாறிவிடும் அபாயம் தென்படுகிறது. இந்தக் காலத்து மாணவர்களிடையே தமிழின் மீது ஆர்வமோ பற்றோ இல்லை என்பது என் கணிப்பு. குறைந்தது ஐந்தாம் வகுப்பு வரை இந்திய மொழிகளிலே கல்வி இருக்கவேண்டும். தமிழ் வாழும், வளரும். அப்போது தான் நீங்கள் சொன்னபோல் நூல்கள் வருவதில் நன்மை உண்டாகும்.

  2. தும்பி அவர்களே

    ‘தமிழில் அறிவியல், பொறியியல், பொருளாதாரம் போன்றவை எழுதினால் படிப்பவர் இருப்பார்களா என ஐயமே’ என்று நீங்கள் அடக்கத்துடன் வினா எழுப்புகிறீர்கள். ஆனால் நான் ‘இருக்கமாட்டார்கள்’ என உறுதியாகச் சொல்கிறேன். ‘பின்பு நாம் ஏன் எழுதவேண்டும். அது நேர விரயம்தானே’ என்றுதான் நானும் ஒருகாலத்தில் எண்ணியிருந்தேன். ஒருமுறை ‘அபிராமி’ என்ற தமிழ் எழுத்தாளருடன் (இவர் பாட்டனாரே புகழ்பெற்ற எழுத்தாளர் அகிலன்) நான் பேச நேர்ந்தது. இவர் அறிவியல் தொழில்நுட்பம் துறைகளில் இன்றைய மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் சிறு நூல்கள் எழுதி வருகிறார். நூற்பட்டியலில் இது போன்ற தலைப்புக்களைக் கண்டு வியப்படைந்த நான், ‘அறிவு நூல்களையெல்லாம் ஆங்கிலத்தில்தானே மக்கள் படிக்கிறார்கள், நீங்கள் தமிழில் எழுதுகிறீர்களே. யார் படிப்பார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னைச் சிந்தனையில் ஆழ்த்தியது. “‘தமிழில் படிக்க விரும்புகிறேன். ஆனால் யார் எழுதுகிறார்கள்?’ என்பவர் ஒரு சிலர் இருந்தாலும், அவர் குறையைப் போக்குவதற்குத்தான் எழுதுகிறேன்” என்றார். படிக்காததால் எழுதவில்லை, எழுதாததால் படிக்கவில்லை என்ற ஒரு சிக்குச்சுழல் (vicious circle) நிலவுகிறதல்லவா? அதை உடைப்பது யாராவது முன்முயற்சி (initiative) எடுத்தால்தான் முடியும்.

    வணக்கங்களுடன்
    கோட்டாளம்


thumbi -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

பிரிவுகள்