ஜெயபாண்டியன் கோட்டாளம் எழுதியவை | மார்ச் 26, 2010

சாண்டியேகோவில் இசைவிழா

சாண்டியேகோவின் இந்திய நுண்கலை அறிவகம் (Indian Fine Arts Academy, San Diego) வழங்கும் ‘இந்திய இசை மற்றும் நடன விழா 2010’ என்ற நிகழ்ச்சி இன்று (25 மார்ச்சு 2010) மாலை ஏழு மணிக்கு இனிது துவங்கியது. பேராசிரியர் V. ராமச்சந்திரன் கலை, கலாச்சாரம், மற்றும் அறிவியல் துறைகளில் பண்டைய இந்தியா சிறந்து விளங்கியதைப் பற்றியும், அவற்றால் உலகில் இன்றுவரை ஏற்பட்ட நல்விளைவுகளைப் பற்றியும் அறிவியல் நோக்கில் உரையாற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

சுழி (zero) என்ற கொள்கை இந்தியாவில்தான் முதலில் தோன்றியது என்று பலரும் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால் பண்டைய இந்தியக் கணிதம் உலகுக்கு அளித்தது வெறும் சுழியன்று, பதின்ம இடமதிப்பால் (decimal place values) பெரிய எண்களைக் குறிப்பிடலாம் என்ற கோட்பாடு கணிதத் துறையின் ஒரு பெரும் வளர்ச்சிக்கு வித்திட்டது என்று பேராசிரியர் விளக்கினார். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்கள் கழிவு வடிகால் வசதியுள்ள நகரங்களை உருவாக்கி அதில் வாழ்ந்து வந்ததற்கு அகழாய்வுச் (archaeological) சான்றுகள் இருப்பதை எடுத்துரைத்தார். உலகின் மிகப் பழம்பெருமை வாய்ந்த கலாச்சாரங்களில் இந்தியக் கலாச்சாரமும் ஒன்று என்று கூறி, அவற்றுள் இன்றுவரை வாழ்ந்துவருவது இந்தியக் கலாச்சாரம் ஒன்றேதான் எனவும் சுட்டிக் காட்டினார்.

நாம் ஒரு செயலைச் செய்யும்போது நம் மூளையில் உண்டாகும் அதே வினைகள் மற்றவர் அந்தச் செயலைச் செய்வதைப் பார்க்கும்போதும் உண்டாகின்றன என்பது உயர் பரிணாம விலங்குகளில் நடத்திய நரம்புவினையியல் (neurophysiological) ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறதாம். (இதே துறையில்தான் பேராசிரியரும் ஓர் ஆய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது). பரிணாம வளர்ச்சியில் முதிர்ந்த மனித இனத்தில் இவ்வியல்பு வளர்ந்த நிலையில் இருப்பதால், நம் முன்னோர்களின் செயல்களை நாம் பார்க்கும்போது அதேபோல் செயலாற்றவும் நாம் கற்றுக்கொள்கிறோமாம். ஆசான் செயலைப் பார்த்துப் பழகிக் கொள்ளும் இந்த இயல்பே நாளடைவில் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குத் தாவும் கலைத்துறைகளாக மலர்ந்தது. இது இந்தியக் கலை நுணுக்கத்தின் தனிச் சிறப்பு.

உலகின் பல கலாச்சாரங்கள் அழிந்துபட்டும், இந்தியாவின் பழங்கலைகள் இன்று வரை தழைத்து வருவதன் காரணம் ஒவ்வொரு தலைமுறையிலும் இடைவிடாது பலர் கலைத் தொண்டாற்றி அவற்றைத் தாங்கி வந்திருப்பதுதான். இக்கலாச்சாரம் பல்லாயிரக் கணக்கான ஆண்டுக்காலம் நிலைநிற்பதற்குப் பல தலைமுறைகளின் உழைப்பு ஒரு சங்கிலித் தொடராக அமைவது அவசியமாகிறது. ஆனால் அது அழிந்துபடுவதற்கு ஒரே ஒரு தலைமுறையில் தொடர்பற்றுப் போவதே போதும் என்ற அச்சத்தையும் பேராசிரியர் ராமச்சந்திரன் நம் மனத்தில் உண்டாக்கினார்.

இக்கலைகளின் நிலையான வளர்ச்சியைப் பாதுகாக்கும் பொருட்டு, வரும் நான்கு நாட்களில் சிதார், சித்திரவீணை, நாதசுரம், வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், மண்டோலின், ஒடிசி நடனம் போன்ற பல துறைகளிலும் கலை விருந்தளிக்கப்போகும் சாண்டியேகோவில் வாழும் கலைஞர்கள் மற்றும் உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்து குழுமியிருக்கும் கலைஞர்கள் அனைவரையும் பேராசிரியர் வரவேற்றார்.  அவர் உரையைத் தொடர்ந்து கார்த்திக் சேஷாத்திரி சிதாரும், அரூப் சட்டோபாத்தியாய் தபலாவும் இயைந்த இசைக் கச்சேரி நடைபெற்றது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: