ஜெயபாண்டியன் கோட்டாளம் எழுதியவை | ஒக்ரோபர் 24, 2010

நடைமுறை இலக்கணம்

நாம் பள்ளியில் இலக்கணம் படிக்கும்போது, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், இருபெயரொட்டுப் பண்புத்தொகை, நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை என்பன போன்ற நீண்ட சொற்றொடர்களை மனப்பாடம் செய்திருக்கிறோம். ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தைத் தமிழாசிரியர் விளக்கியபோது நன்றாகத்தான் விளங்கியது. ஆனால் மறுநாள் அவர் வினவியபோது எல்லாம் மறந்து பேசா மடந்தைகளாய் நின்றோம். தேர்வில் மதிப்பெண்கள் வாங்குவதற்காக இலக்கணத்தை முனைந்து படித்தாலும் இவற்றால் அன்றாட வாழ்வில் என்ன பயன் இருக்கப் போகிறது என்ற ஓர் உறுத்தல் நம் உள்மனத்தில் இருந்தே வந்தது. ஏனென்றால் பள்ளிப்படிப்பு கறிக்குதவா ஏட்டுச் சுரைக்காயாகத்தான் கற்பிக்கப் படுகிறது. எனவே நடைமுறைக்கு அவசியமான சில இலக்கணக் குறிப்புகளை இங்கு தருகிறேன்.

1. சமையலறையிலிருந்து வடைசுடும் வாசனை உங்களை இழுக்கிறது. நீங்கள் சென்று ஒரு வடையைக் கேட்டு வாங்கி உண்கிறீர்கள். இந் நிகழ்ச்சியை உங்கள் நண்பருக்கு மின்னஞ்சலில் எவ்வாறு எழுதுவீர்கள்?

வடையை கேட்டேன்

எனக்கு தந்தார்

வாங்கி தின்றேன்

என்று எழுதினாலும் எழுதுவீர்கள். ஆனால் இதில் இலக்கணப்பிழை உள்ளது. இங்கு, ‘வடையை’ என்ற சொல்லில் ‘ஐ’ என்ற எழுத்து இரண்டாம் வேற்றுமை உருபாகும். ‘எனக்கு’ என்ற சொல்லில் ‘கு’ என்ற எழுத்து நான்காம் வேற்றுமை உருபாகும். இவ்வேற்றுமை உருபுகளை அவற்றின் சூழமைவிலிருந்து (in context) எளிதில் இனங் கண்டுகொள்ளலாம். அதாவது ‘பெயர்+ஐ வினை’, ‘பெயர்+கு வினை’ (noun+ஐ verb, noun+கு verb) என்ற அமைவுகளிலிருந்து கண்டுகொள்ளலாம். இந்த அமைவுகளின் பிற்பகுதியில் உள்ள வினைச்சொல் ஒரு வல்லின எழுத்தில் (க, ச, த, ப) தொடங்கினால் அவற்றின் முன் முறையே க், ச், த், ப் ஆகிய எழுத்துக்களைச் சேர்க்க வேண்டும். ஆகவே

வடையைக் கேட்டேன்

எனக்குத் தந்தார்

என்று எழுதுவதே சரியானதாகும்.

‘வாங்கி’ என்பது வினைச்சொல்; ஆனால் அது வினைமுற்றாக இல்லாமல் வினை எச்சமாக உள்ளது. இரண்டுக்கும் என்ன வேறுபாடு? ‘வாங்கினேன்’ என்றிருந்தால் அது செயல் முடிவடைந்ததைக் குறிக்கும். ஆனால், ‘வாங்கி’ என்ற சொல்லுக்குப் பின் இன்னொரு வினை வரவேண்டும். ஆகவே அது வினை எச்சம் எனப்படும். மேலும் இது ‘இ’ என்ற எழுத்தில் முடியும் வினையெச்சம். இவ்வாறான வினையெச்சத்தின் பின் க, ச, த, ப வந்தாலும், முறையே க், ச், த், ப் சேர்க்க வேண்டும். ஆகவே,

வடையைக் கேட்டேன்

எனக்குத் தந்தார்

வாங்கித் தின்றேன்

என்று எழுதுவதே சரியானது இந்த மூன்று இலக்கண விதிகளுக்கும் எடுத்துக்காட்டாக மேற்கண்ட வரிகளை ஒரு சூத்திரம்போல் நினைவில் கொண்டால், நாம் எழுதுவதில் ஏற்படும் பிழைகளில் சுமார் 80 விழுக்காட்டைத் தவிர்க்கலாம்.

2. Cow give milk என்று எழுதும் ஒருவரை அரைகுறையாக ஆங்கிலம் தெரிந்தவர் என்று விரைவில் இனங்கண்டுகொள்கிறோம். அதைப்போலவே ‘ஆடும் மாடும் வந்தது’ என்று நாம் எழுதினால், நம்மையும் அரைகுறையாகத் தமிழ் தெரிந்தவர் என்று அறிஞர் இனங்கண்டுகொள்வர். ஆடும் மாடும் என்ற சொற்றொடர் இரண்டு விலங்குகளைக் குறிப்பதால் அதற்கு இயைபான பன்மை வினைமுற்றைப் பயன்படுத்தி ‘ஆடும் மாடும் வந்தன’ என்று எழுத வேண்டும்.

அதைப்போலவே, ‘ராமனும் சீதையும் சென்றனர்’ என்று எழுதவேண்டும். வந்தது, சென்றார் போன்ற ஒருமை வினைமுற்றுடன் ‘கள்’ சேர்த்து வந்ததுகள், சென்றார்கள் என்று எழுதுதல் படிக்காதவர்கள் எழுதுதல் போலுள்ளது. ‘கள்’ சேர்க்கும் விதி பெயர்ச்சொற்களுக்கே பொருந்தும்; வினைச்சொற்களுக்கு ஆகாது.

‘குமரன் கதையும் கட்டுரையும் எழுதினான்’ என்பதில் ஒருமை வினைச்சொல் உள்ளது. ‘குமரனால் கதையும் கட்டுரையும் எழுதப்பட்டன’ என்பதில் பன்மை வினைமுற்று உள்ளது. ஏன்? பிந்தையதில் வாக்கியத்தின் எழுவாய் (subject) ‘கதையும் கட்டுரையும்’ என்பதாகும்.

‘இரண்டு மாடு வந்தது’ என்பது தவறு; ‘இரண்டு மாடுகள் வந்தன’ என்பதே சரியென்பதும் சொல்லாமலே விளங்கும். ‘வரும்’ என்ற வருங்கால வினைச்சொல்லின் பன்மை வடிவம் ‘வருவன’ என்பதாகும்.

3. A apple and a orange என்று தவறுதலாகச் சொல்லிவிட்டாலோ எழுதிவிட்டாலோ நாம் மிகுந்த வெட்கமடைந்து an apple and an orange என்று உடனே திருத்திக்கொள்கிறோம். ஆனால் ‘ஒரு ஆப்பிளும் ஒரு ஆரஞ்சும்’ என்ற சொற்றொடரிலும் அதே தவறு இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. உயிரெழுத்தில் தொடங்கும் பெயர்ச்சொல்லுக்கு முன் ‘ஒரு’ என்ற சொல் வராமல் ‘ஓர்’ வரவேண்டும் என்ற விதி தமிழிலும் உள்ளது. எனவே ‘ஓர் ஆப்பிளும் ஓர் ஆரஞ்சும்’ என்பதே சரி.

இதைப்போலவே ‘இரு’, ‘ஈர்’ என்ற சொற்களும் உள்ளன. ஈராண்டுகள், இரு மலர்கள் என்பவை சரியானவை.

மேலும், அது, அஃது, இது, இஃது, எது, எஃது என்ற சொற்களுக்கும் இதே விதி பொருந்தும். அஃது ஆடு, இது மாடு என்று எழுதியிருந்தோமானால் தமிழாசிரியர் மகிழ்ந்து அதிக மதிப்பெண்கள் வழங்கியிருப்பார்.

4. நீங்கள் நண்பர் வீட்டுக்குச் சென்று அவருடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அப்போது அவர் இளைய மகன் குமரன் அங்கு வருகிறான். நீங்களோ அவனை நண்பருடைய மூத்த மகன் கண்ணன் என்று நினைக்கிறீர்கள். இருந்தாலும் உங்கள் மனதில் ஓர் ஐயம் எழுகிறது. அந்த ஐயத்தைப் போக்கிக்கொள்ள நண்பரிடம் என்ன கேட்பீர்கள்? ‘இவன் கண்ணனா?’ என்று கேட்க வேண்டும்.

‘இது கண்ணனா?’ ‘இது யார்?’ என்றெல்லாம் கேட்பது தவறு! ‘அது’, ‘இது’ ஆகியவை அஃறிணை சொற்களல்லவா? எனவே ‘இது கண்ணனா?’ என்று கேட்பது ‘இது மாடா?’ என்று கேட்பது போலாகும்.

வயதில் குறைந்த பெண்ணையும் ‘அவள் வருகிறாள்’ என்று சொல்வது மரியாதைக் குறைவு எனக் கருதி, ‘அது வருகிறது’ என்று சொல்லும் வழக்கம் சிலரிடம் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் இலக்கண முறைப்படியும், வேறு சிலர் நோக்கிலும் இது மேலும் இழிவானதாகத் தோன்றுகிறது. ஒரு பெண்ணை மரியாதையுடன் விளிக்க விரும்பினால், ‘அவர் வருகிறார்’ என்று சொல்லவேண்டும். ‘அவர்’ என்ற சொல் இருபாலருக்கும் பொதுவானது. ஆங்கிலத்தில் he or she, him or her என்றெல்லாம் சொல்லித் திண்டாடும்போது, அதற்குரிய சொல் தமிழில் ஏற்கெனவே இருப்பதை எண்ணி நாம் பெருமை கொள்வதுடன், அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

5. குமரனைப் பார்த்து ‘இவன் கண்ணனா?’ என்று ஒருவர் கேட்டால் அதற்கு எப்படிப் பதிலளிக்கவேண்டும்? ‘இவன் கண்ணன் இல்லை’ என்று சொல்வது தவறு. ‘இவன் கண்ணன் அல்லன்’ என்பதே சரியானதாகும். ‘இல்லை’ என்ற சொல்லை nonexistent, out of stock, nil என்ற பொருள்வரும்படிப் பயன்படுத்தவேண்டுமேயன்றி, is not என்ற பொருளில் பயன்படுத்தலாகாது. அதாவது, இருக்கவேண்டிய பொருள் இல்லாமல் போய்விட்டால், அது இல்லை என்று கூறலாம்; ஒரு சொற்றொடரை எதிர்மறை ஆக்குவதற்குப் பயன்படுத்தலாகாது.

There is no salt is the bottle – குப்பியில் உப்பு இல்லை.

There is no God – கடவுள் இல்லை

He is not Kannan – இவன் கண்ணன் அல்லன்.

She is not Madhavi – இவள் மாதவி அல்லள்.

He (or she) is not the minister – இவர் அமைச்சர் அல்லர்.

They are not students – இவர்கள் மாணவர்கள் அல்லர்.

This is not a goat – இஃது ஆடு அன்று.

These are not goats – இவை ஆடுகள் அல்ல.

கடவுள் இல்லையென்பது நான் சொல்வதன்று; தந்தை பெரியார் சொன்னது. அவர் சொன்னதில் இலக்கணப் பிழை ஒன்றுமில்லை. கருத்துப் பிழை இருக்கிறதா என்பதை மற்றொரு நாள் விவாதிப்போம்.

தமிழிலோ ஆங்கிலத்திலோ உயர்தரமாக எழுதுபவர்களிடம் தனிச்சிறப்பு ஒன்றுமில்லை. அவர்களும் நம்மைப்போலவே பிறந்து, நம்மைப்போலவே உணவுண்டு, நம்மைப்போலவே பள்ளி சென்று, நம்மைப்போலவே வளர்ந்தவர்கள்தாம். மேற்கண்ட ஒரு சில எளிய விதிகளைப் பின்பற்றுவதன்மூலம் நாமும் அவர்களைப்போலவே எழுதப் பழகிக்கொள்ளலாம். அண்மைக்காலம்வரை எனக்கும் அவ்வாறு எழுதத் தெரிந்திருக்கவில்லை. டாக்டர் சொ. பரவசிவம் எழுதிய ‘நற்றமிழ் இலக்கணம்’ என்ற நூலிலிருந்தும் மற்ற சில நூல்களிலிருந்தும் கடின உழைப்பால் நான் பெற்ற சில குறிப்புக்களை எளிமைப்படுத்தி இங்கு எழுதியிருக்கிறேன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: